மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்து விட்ட தனியார் வணிக வளாக உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்து விட்ட தனியார் வணிக வளாக உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 13 Nov 2019 10:45 PM GMT (Updated: 13 Nov 2019 7:16 PM GMT)

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்து விட்ட தனியார் வணிக வளாக உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவொற்றியூர், 

மழைநீர் கால்வாயில் கழிவுநீரை திறந்து விட்ட தனியார் வணிக வளாக உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது மழைநீர் கால்வாயை சீரமைக்க கோரி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் தெப்பக்குளம்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் வெளியே உள்ள தெப்பக்குளத்துக்கு மாடவீதிகளில் இருந்து செல்லும் மழைநீர் கால்வாய்கள் மூலம் தண்ணீர் சென்று குளத்தில் தேங்கும்படி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கோவில் குளத்துக்கு செல்லும் மழைநீர் கால்வாயில் சிலர் கழிவுநீரை திறந்து விடுவதாலும், மழைநீர் கால்வாயை சரியாக பராமரிக்காததாலும் வடிவுடையம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு சமீபத்தில் பலத்த மழை பெய்தபோதும் ஒரு சொட்டு கூட தண்ணீர் வராமல் குளம் காய்ந்துபோய் கிடைக்கின்றது.

ரூ.25 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில் திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்து கழிவுநீரை, மழைநீர் கால்வாயில் திறந்துவிடப்படுவதாக வந்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மழைநீர் கால்வாய் மூடியை அப்புறப்படுத்தி பார்த்தபோது, அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, கோவில் குளத்துக்கு தண்ணீர் செல்லும் மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து அந்த வணிக வளாக உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதிகாரிகளை முற்றுகையிட்டனர்

அப்போது அங்குவந்த பக்தர்களும், பொதுமக்களும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு, மாடவீதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை உடனடியாக சீரமைத்து மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அதிகாரிகள், இன்னும் ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story