புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு பஸ் சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு பஸ் சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Nov 2019 4:15 AM IST (Updated: 14 Nov 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அதிநவீன பஸ் சேவையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அதிநவீன குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அதிநவீன குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி பஸ் சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், பஸ் பயணத்தின் போது சொகுசாக சிரமமின்றி பயணிக்கவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய அதிநவீன சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அதிநவீன பஸ் வசதிகள், கூடுதல் பஸ் வசதிகள் போன்றவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் இருந்து சென்னை வரை நீண்ட தூரம் பயணம் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய அதிநவீன குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி பஸ் சேவை தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

தினமும் இந்த பஸ் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு பயணிக்கும். இதேபோன்று மற்றொரு பஸ் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டையை வந்தடையும். இந்த பஸ் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை விழாக்காலம் நீங்கலாக படுக்கை வசதிக்கு ஒரு நபருக்கு ரூ.735-ம், இருக்கை வசதிக்கு ரூ.450-ம் பயணக் கட்டணமாக வசூலிக்கப் படும். இதேபோன்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் படுக்கை வசதிக்கு ஒரு நபருக்கு ரூ.815-ம், இருக்கை வசதிக்கு ரூ.530-ம் பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு இந்த அதிநவீன குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி பஸ் முதல் முறையாக இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் இந்த பஸ் வசதியினை உரிய முறையில் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்தினை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து பல்வேறு புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் ராதிகா, திருச்சி கிளை மேலாளர் நேரு, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், மத்திய தொலைதொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர் பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சேட் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story