திண்டுக்கல்லில் பட்டப்பகலில் கைவரிசை: நர்சு வீட்டில் பூட்டை உடைத்து 32 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை
திண்டுக்கல்லில் பட்டப்பகலில் நர்சு வீட்டில் பூட்டை உடைத்து 32 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ்நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 63). ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சுகுணாதேவி (59). இவர், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை செய்து ஓய்வுபெற்றவர் ஆவார். இவர்களின் மகன் தினேஷ்குமார், திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை செல்வராஜ் தனது மனைவியுடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் தினேஷ்குமார், வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இதற்கிடையே செல்வராஜின் தந்தை வைரபிள்ளை, மதியம் அங்கு வந்தார். அப்போது வீட்டின் கேட் பூட்டி இருந்தது.
ஆனால், வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வைரபிள்ளை, மகன் செல்வராஜ் மற்றும் பேரன் தினேஷ்குமார் ஆகியோருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் தினேஷ்குமார் வீட்டுக்கு வந்தார். பின்னர் கேட்டை திறந்து உள்ளே சென்ற போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டுக்குள் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. அதில் இருந்த 32 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதுபற்றி திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில், பட்டப்பகலில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story