145 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலுடன் கவர்னரை சந்திப்போம் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் நாராயண் ரானே சொல்கிறார்


145 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலுடன் கவர்னரை சந்திப்போம் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் நாராயண் ரானே சொல்கிறார்
x
தினத்தந்தி 14 Nov 2019 4:00 AM IST (Updated: 14 Nov 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

145 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலுடன் கவர்னரை சந்தித்து, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று நாராயண் ரானே கூறினார்.

மும்பை,

145 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலுடன் கவர்னரை சந்தித்து, பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று நாராயண் ரானே கூறினார்.

ஜனாதிபதி ஆட்சி

மராட்டியத்தில் பாரதீய ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்தது. இந்த கால கட்டத்தில் பொறுத்திருந்து கவனிக்கும் கொள்கையை பாரதீய ஜனதா பின்பற்றியது.

ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட பிறகும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி உள்ளன.

இந்த நிலையில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் நாராயண் ரானே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

145 எம்.எல்.ஏ.க்களுடன்...

பாரதீய ஜனதாவின் புதிய அரசை உருவாக்க நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் அதுபற்றி விவாதிக்க மாட்டேன். ஜனாதிபதி ஆட்சி அமலாகி விட்டதால் தீர்வு ஏற்பட்டு விடவில்லை.

நான் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசினேன். ஆட்சி அமைப்பதற்கான பணியை தொடங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்காக 145 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலுடன் கவர்னரை சந்திக்கும். வெறும் கைகளோடு போக மாட்டோம்.

முட்டாளாக்குகிறது

சிவசேனாவை காங்கிரஸ் முட்டாளாக்குகிறது. இவ்வளவு ஆண்டுகள் அரசியல் நடத்தும் சிவசேனா, காங்கிரஸ் தலைவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர்கள் உங்கள் முன்பு ஒன்றை பேசுவார்கள். பின்னால் ஒன்றை பேசுவார்கள். பத்திரிகையாளர்களிடம் ஒன்றை பேசுவார்கள். இதையெல்லாம் சிவசேனா கற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடக்கத்தில் சிவசேனாவை சேர்ந்தவரான நாராயண் ரானே, அந்த கட்சியின் ஆட்சியின் போது முதல்-மந்திரி பதவி வகித்தார். பின்னர் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகிய அவர், புதிய கட்சியை தொடங்கினார். அப்போது பாரதீய ஜனதா சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story