குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டம் - தர்மபுரியில் பரபரப்பு
தர்மபுரியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரி நகராட்சி லாரியை சிறைபிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏ.எஸ்.டி.சி. நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி மூலம் ஒகேனக்கல் குடிநீர் வினியோகிக்கபட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தர்மபுரி பிடமனேரி பகுதியில் பெய்த கனமழையால் பிடமனேரி ஏரி நிரம்பி அதில் உள்ள உபரிநீர் கால்வாய்கள் வழியாக ஓடியது. அந்த கால்வாய்கள் சிறியதாக இருந்ததால் உபரிநீர் ஏ.எஸ்.டி.சி. நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கால்வாய்களை சீரமைத்து அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் உள்ள ஒகேனக்கல் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டதால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். இவர்களுக்கு சில நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி லாரி மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஏ.எஸ்.டி.சி நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நேற்று இந்த பகுதிக்கு வந்த நகராட்சி குடிநீர் லாரியை சிறைபிடித்தனர். அந்த லாரி முன்பு காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அந்த பகுதியில் ஒகேனக்கல் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story