4 கல் குவாரிகளுக்கு ஏலம்: விண்ணப்பம் செலுத்துவதில் 2 தரப்பினர் இடையே மோதல் - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
4 கல் குவாரிகளுக்கு நடத்தப்படும் ஏலத்தில் விண்ணப்பம் செலுத்துவதில் 2 தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
அந்தியூர் அருகே சென்னம்பட்டி மலைஅடிவாரத்தில் 4 குவாரிகளை ஏலம்விட ஈரோடு மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான ஏலம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் விண்ணப்பங்களை செலுத்துவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ஒரு தரப்பினர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை போட்டனர். அதன்பின்னர் மற்றொரு தரப்பினர் விண்ணப்பங்களை போடுவதற்காக அங்கு வந்தனர். அப்போது ஏற்கனவே விண்ணப்பங்களை செலுத்தியவர்கள் அவர்களை தடுத்ததாக தெரிகிறது. மேலும், பெட்டியில் போடுவதற்காக கொண்டு வரப்பட்ட விண்ணப்பங்களை கிழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். மேலும், இருதரப்பினரிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் மற்றொரு தரப்பினர் வேறு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பெட்டியில் போட்டனர். விண்ணப்பங்கள் செலுத்துவதற்கான நேரம் முடிந்தபிறகு பெட்டியை அதிகாரிகள் சீல் வைத்து பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று நடப்பதாக இருந்த ஏலம் வருகிற 19-ந் தேதி பகல் 11 மணிக்கு ஒத்தி வைத்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story