பழனி தைப்பூச திருவிழாவில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் சாலை வசதி - ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
பழனி தைப்பூச திருவிழாவின் போது பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க் கும் வகையில் வையாபுரிகுளம் அருகே கூடுதலாக சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிவார்கள். அத்துடன் பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் பழனியில் தைப்பூச திருவிழா கொண் டாடப்பட இருக்கிறது.
இதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பழனி முருகன் கோவில் இணை ஆணையர் ஜெயசந்திர பானுரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு செய்துகொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் விவரம் வருமாறு:-
திருவிழா தொடங்குவதற்கு முன்பு பழனி பஸ் நிலையம், அடிவாரம் மற்றும் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பறை, குளியல் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கோவில் வளாகம், கிரிவல வீதியில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும். சண்முகநதியில் பக்தர்கள் குளிக்கும் வகையில் படித்துறைகளை ஏற்படுத்த வேண்டும். திருவிழா காலங்களில் பழனி நகர் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பாலாறு அணையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
மேலும் திருவிழாவின்போது பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வையாபுரிகுளம் அருகே கூடுதலாக சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நில எடுப்பு செய்ய வேண்டி இருந்தால் அந்த பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கோவிலுக்கு சொந்தமான இடங்களுக்கு கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி அனுபவ சான்று, கிராம பதிவேடு நகல் வழங்குவதை தடுக்க வேண்டும். பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தனிப்பாதைகளுடன் கூடுதலாக தாராபுரம்-பழனி மற்றும் உடுமலை-பழனி சாலைகளில் பாதயாத்திரை பக்தர்களுக்காக தனிப்பாதை அமைக்க வேண்டும். இடும்பன்குளத்தில் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகுகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story