போலீஸ் நிலையத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


போலீஸ் நிலையத்தில் வாலிபரை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை - ராமநாதபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:30 PM GMT (Updated: 14 Nov 2019 8:20 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வந்த வாலிபரை சுட்டு கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் பகுதியை சேர்ந்தவர் காட்டுவா என்ற அல்லாபிச்சை. அவருடைய மகன் செய்யது முகமது (வயது 24).

இவரது நண்பர் முகமது சாலிகு கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் ்தேதி தனது மோட்டார் சைக்கிளை அதேபகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்ற மெக்கானிக்கிடம் வேலை பார்க்க விட்டுள்ளதாகவும், அதனை வாங்கிவரும்படியும் செய்யது முகமதுவிடம் கூறியுள்ளார். இதன்படி செய்யது முகமது அங்கு சென்று மோட்டார் சைக்கிளை கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தன்னை தாக்க முயன்றதாக அருள்தாஸ் எஸ்.பி.பட்டினம் போலீசாரிடம் தெரிவித்தாராம். இதன் அடிப்படையில் போலீஸ் நிலையத்துக்கு செய்யது முகமதுவை அழைத்து வந்து போலீசார் விசாரித்து உள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் நிலையத்துக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், செய்யது முகமதுவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ் அவரை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே செய்யது முகமது பரிதாபமாக பலியானார்.

விசாரணையின் போது செய்யது முகமது வைத்திருந்த கத்தியை வாங்கி மேஜையில் வைத்திருந்ததாகவும், அதனை எடுத்து அவர் தன்னை குத்தவந்தபோது தற்காப்பிற்காக சுட்டதாகவும் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசை கைது செய்தனர். மேலும் அவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வாலிபரை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

அபராத தொகையை பாதிக்கப்பட்ட செய்யது முகமதுவின் குடும்பத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே தன் மீதான பணியிடை நீக்கத்தை ரத்து செய்து ஐகோர்ட்டில் உத்தரவு பெற்ற பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மதுரையில் குற்றப்பிரிவில் பணியாற்றயது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக நேற்று மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டார்.


Next Story