மாவட்ட செய்திகள்

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி மற்றொருவர் கவலைக்கிடம் + "||" + 2 students trapped in school bus

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி மற்றொருவர் கவலைக்கிடம்

பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி மற்றொருவர் கவலைக்கிடம்
தனியார் பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், ஐ.ஏ.எப். சாலையைச் சேர்ந்தவர் பிரசாந்த்(வயது 20). இவர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

அதேபோல் கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தைச்சேர்ந்தவர் ஜெகநாதன்(18), அகரம்தென், கோகுலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்(18). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

இவர்களில் தினேஷ், சேலையூரில் உள்ள நகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஜெகநாதனும், பள்ளியில் படித்து வருகிறார்.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

நேற்று மாலை பிரசாந்த், ஜெகநாதன், தினேஷ் ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சேலையூர் அகரம்தென் சாலையில் சென்று கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர். நகர் அருகே வந்தபோது, முன்னாள் சென்ற தனியார் பள்ளி பஸ்சை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது மோட்டார்சைக்கிள் மீது கல்லூரி பஸ் மோதியதில் 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். இதில் பிரசாந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் மீது தனியார் பள்ளி பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் இருவரும் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

மற்றொருவர் கவலைக்கிடம்

படுகாயமடைந்த ஜெகநாதன், தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பஸ் டிரைவரான காஞ்சீபுரம் மாவட்டம் நல்லம்பாக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை கைது செய்தனர்.

* குழந்தைகள் தினத்தை முன்னிட்டு டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் தங்கி படிக்கும் குழந்தைகள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

* போலீஸ் பணியில் இருந்து நீக்கியதால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற பிரசாத், ராயப்பேட்டையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகம் முன் அமர்ந்து தன்னை மீண்டும் வேலையில் சேர்க்காவிட்டால் தற்கொலை செய்வதாக கூறினார். அவரை ராயப்பேட்டை போலீசார் அழைத்து சென்றனர்.

* நியூ ஆவடியில் சாலையில் கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற உஷா(56) என்ற பெண் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

* சூளையை சேர்ந்த செல்வி(34) என்பவர் மொபட்டில் சென்றபோது தவறவிட்ட 6 பவுன் நகையை கண்டெடுத்த முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த முதியவர் பழனிசாமி(68) நேர்மையுடன் அதை செல்வியிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர்.

* தரமணியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லட்சுமணன் (41) என்பவரை போக்சோ சட்டத்தின்கீழ் கிண்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.