உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 10:23 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

சிவகாசி,

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சிவகாசி, திருத்தங்கல் நகர், சிவகாசி மேற்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டங்களில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே பேசினார்.

சிவகாசி மேற்கு ஒன்றியம் சார்பில் சாட்சியாபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழக தேர்தல் ஆணையம் இன்னும் 20 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பை வெளியிடலாம். உறுதியாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதனால் நமது பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு யாரை தேர்தலில் நிறுத்துவது யாருக்கு வெற்றி சாதகமாக இருக்கிறது என்று ஆலோசனை செய்யவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

நமது கட்சியில் போட்டியிட தகுதியும், வாய்ப்பும், வசதியும் பலருக்கு இருக்கும். ஆனால் ஒரு பதவிக்கு ஒருவருக்கு தான் வாய்ப்பு வழங்க முடியும். அந்த நிலையில் கட்சியின் தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ? அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது மற்ற நிர்வாகிகளின் பணி ஆகும். நமக்குள் போட்டி இல்லாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். தொண்டர்களின் உழைப்பில் தான் அ.தி.மு.க.வின் வெற்றி இருக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளில் அ.தி. மு.க. பெற்ற வெற்றியை கண்டு தி.மு.க. பயப்பட தொடங்கி விட்டது. இந்த வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். அ.தி. மு.க.வைச் சேர்ந்தவர் தான் சிவகாசி ஒன்றிய தலைவராக வேண்டும். நமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். தேர்தலில் உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்பது நமக்கு தெரியும். வெற்றி நம்மை தேடி வருகிறது. சிவகாசி ஒன்றியத்தை மீண்டும் கைப்பற்றுவோம். 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் கைப்பற்ற வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

கூட்டத்தில் சிவகாசி மேற்கு ஒன்றியம் சார்பில் அமைச்சருக்கு கிரீடம் மற்றும் வீரவாள் நினைவு பரிசாக ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, வேண்டுராயபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் நாரணம்மாள் சுப்பிரமணியம், குமரேசன், சேகர் பாண்டி, கருப்பசாமி, முனியாண்டி, வடப்பட்டி பிச்சை, குருபாண்டியன், பழனிமுருகன், செல்வராணி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் சேதுராமன், இணை செயலாளர் ரவிச்செல்வம், திருத்தங்கல் நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பால்பாண்டி, இளைஞர் பாசறை ஒன்றிய துணை செயலாளர் பள்ளபத்தி அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 200 பேர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story