மதுரையில் அரசு பெண் டாக்டர் உயிரிழப்பு: டெங்கு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்


மதுரையில் அரசு பெண் டாக்டர் உயிரிழப்பு: டெங்கு விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2019 11:00 PM GMT (Updated: 14 Nov 2019 10:44 PM GMT)

டெங்கு விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றும், காய்ச்சல் இருந்தால் உடனடி சிகிச்சை எடுக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து ஒருபுறம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வந்தாலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் மட்டும் நின்ற பாடில்லை.

நேற்று முன்தினம் காய்ச்சலுக்கு மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த தியாசினி என்ற 7 வயது சிறுமி பரிதாபமாக இறந்து போனாள்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எம்.பி.பி.எஸ். படித்து அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பிருந்தா (வயது 27) என்ற பெண் டாக்டர் டெங்கு காய்ச்சலுக்கு மதுரையில் உயிரிழந்தது வேதனையிலும் வேதனையானது.

மதுரை பழைய நத்தம் ரோடு விசாலாட்சிபுரத்தை சேர்ந்த அவர், ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தநிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள், அவரை பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக இறந்து போனார்.

எனவே மக்கள் டெங்கு விஷயத்தில் இன்னும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதனை இந்த சம்பவங்கள் உணர்த்தி உள்ளன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ‘ஏடிஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக்கூடியவை. 3 வாரங்கள் உயிர் வாழும் இந்த கொசுக்கள் நல்ல தண்ணீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும்.

டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் ‘ஏடிஸ்’ கொசுக்கள் உருவாகின்றன. இந்த கொசுக்கள் கடிக்கும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்புவலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்.

டெங்கு வைரஸ் கிருமியானது ரத்த தட்டு அணுக்களை அழித்து விடும். ரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறையும் போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்த கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிர் இழப்புக்கூட நேரிடலாம்.

சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, எலி காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, பன்றி காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை தாமதமானாலோ, சுயமாக மருந்துகள் உட்கொண்டாலோ, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல் நலம் கடுமையாக பாதிக்க நேரிடும். எனவே இதில் அலட்சியம் காட்டாமல் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உரிய மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும்.

உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் இருந்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம்.

டெங்கு காய்ச்சல் உடலில் நீர் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓ.ஆர்.எஸ். போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும். காய்ச்சல் நின்ற பிறகு 3 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும் நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளையும் பயன்படுத்தலாம். டெங்கு காய்ச்சலை தடுக்க ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிட வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி, கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொண்டால் டெங்குவை முழுமையாக ஒழித்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறும்போது, “மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு 50 படுக்கைகள், கொசுவலைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதிப்புடன் 180-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் டெங்குக்கான தனி வார்ட்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 140-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

Next Story