பெண்ணை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த, விசைத்தறி தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை


பெண்ணை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்த, விசைத்தறி தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 10:45 PM GMT)

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த விசைத்தறி தொழிலாளர்கள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் இடுவம்பாளையம் குட்டைதோட்டத்தை சேர்ந்தவர் பாலாமணி(வயது 58). இவர் அப்பகுதியில் விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 30-10-2016 அன்று காலை வீட்டில் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த 43 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம், வீட்டில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் கணினி உதிரிபாகம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார்(24) மற்றும் அவருடைய நண்பரான கோவை சூலூர் வெள்ளஞ்செட்டிப்பாளையத்தை சேர்ந்த அருள்ஜோ(27) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கொலையான பாலாமணியின் சகோதரர் சோமனூர் அருகே உள்ள காளிபாளையத்தில் விசைத்தறி கூடம் வைத்துள்ளார். அந்த கூடத்தில் ரவிக்குமாரும், அருள்ஜோவும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். பாலாமணி வீட்டில் நகை, பணம் அதிகம் இருப்பதை அறிந்து, சம்பவத்தன்று அவர் தனியாக இருந்த நேரத்தில் வீடு புகுந்து பாலாமணியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ரவிக்குமார், அருள்ஜோ இருவருக்கும், வீட்டுக்குள் அத்துமீறி கொள்ளையடிக்க முயன்ற குற்றத்துக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை, பெண்ணை தாக்கி கொள்ளையடித்த குற்றத்துக்கு தலா 7 ஆண்டு கடு்ங்காவல் சிறை தண்டனை, பெண்ணை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதித்தும், இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.

Next Story