கோவில் குளங்களை ஆக்கிரமிப்பின்றி பாதுகாக்க வேண்டும் - நிர்வாகத்தினருக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தல்


கோவில் குளங்களை ஆக்கிரமிப்பின்றி பாதுகாக்க வேண்டும் - நிர்வாகத்தினருக்கு கலெக்டர் அருண் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 14 Nov 2019 11:00 PM GMT (Updated: 14 Nov 2019 11:10 PM GMT)

கோவில் நிலம் மற்றும் குளங்களை ஆக்கிரமிப்பின்றி நிர்வாகத்தினர் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண் அறிவுறுத்தினார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அறங்காவல் குழு, சிறப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண் தலைமை தாங்கினார்.

இதில் ஆணையர் சச்சிதானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கோவில் குளங்களை பராமரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது 30 கோவில் குளங்களில் 25 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கலெக்டர் அருண், “தூர்வாரப்படாத 5 கோவில் குளங்களை உடனடியாக தூர்வார வேண்டும், கோவில் குளங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக அவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் உதவியை அணுகி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசையா சொத்துக்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை வைக்காத கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கு ஏற்பாடு செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும். கோவில் நிர்வாகத்தினர், கோவில் நிலத்திலோ அல்லது குளத்திலோ ஆக்கிரமிப்புக்கு இடமில்லாமல் பாதுகாக்க வேண்டும். குளங்களை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

இதையொட்டி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எந்த ஒரு உதவிக்கும் கோவில் நிர்வாகத்தினர் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையரை அணுகலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story