தூத்துக்குடியில், அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு


தூத்துக்குடியில், அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி - ஒருவர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Nov 2019 10:45 PM GMT (Updated: 14 Nov 2019 11:43 PM GMT)

தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தை சேர்ந்தவர் திவாகரன். இவர் தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் கோவில்ராஜ் (வயது 35) என்பவரை தொடர்பு கொண்டு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் மூலம் பலரிடம் சுமார் ரூ.1 கோடியே 7 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் கூறியபடி அவர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த கோவில்ராஜ், திவாகரனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திவாகரன் சரியாக பதில் சொல்லாமல் கோவில்ராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவில்ராஜ் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபுவிடம் புகார் மனு கொடுத்தார். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், திவாகரன், வடக்கு நரையன்குடியிருப்பை சேர்ந்த நாகராஜன் (32), திவாகரன் மனைவி ஜூலி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தார். மற்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Next Story