உள்ளாட்சி தேர்தல்: தூத்துக்குடி, நெல்லை உள்பட 3 மாவட்ட அலுவலர்களுக்கு பயிற்சி
தூத்துக்குடி, நெல்லை உள்பட 3 மாவட்ட அலுவலர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு நேற்று காலையிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாலையிலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி தலைமை தாங்கி ஆய்வு செய்தார். மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர்கள் சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), ஷில்பா (நெல்லை), பிரசாந்த் எம் வடநேரே (கன்னியாகுமரி) ஆகியோர் தங்கள் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.பழனிச்சாமி பேசியதாவது:-
வருகிற உள்ளாட்சி தேர்தலில் எந்த அளவுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபாட்டோடு, அர்ப்பணிப்போடு தயாராக உள்ளார்கள் என்பதை அறிவதே இந்த கூட்டத்தின் நோக்கம். தேர்தலை பொறுத்தவரை விதிமுறை தெளிவாக உள்ளது. அதனை புரிந்து கொண்டு, அதனை பின்பற்றி தேர்தலை நடத்தும்போது சுதந்திரமாக, நியாயமான தேர்தலை நடத்த முடியும்.
தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் பணி மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு தேர்தல் நடத்தும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நன்றாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இது நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் போன்று கிடையாது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 450 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. பஞ்சாயத்து தலைவர்கள் மட்டும், 12 ஆயிரத்து 524 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என சுமார் 10 லட்சம் பேர் போட்டியிடுவார்கள். இது மிகப்பெரிய தேர்தல் ஆகும்.
ஏற்கனவே பல்வேறு நிலையில் உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் பணியாற்றிய அனுபவம் இருக்கும். இதனை நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சியில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பயிற்சியை நல்ல முறையில் அலுவலர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு தயாராகும்போது, எந்தவித தயக்கமும் இன்றி, எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி தேர்தல் பணியாற்றலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் ஆனந்தராஜ், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன், நெல்லை உதவி கலெக்டர் பிரதீக் தயால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள் தனபதி (தூத்துக்குடி), மந்தராசலம் (நெல்லை), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) சந்திரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story