ஆட்சியில் சமபங்கு திட்டம் உருவாக்கப்பட்ட போது பா.ஜனதா தலைவர்களால் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தாரா? அமித்ஷாவுக்கு, சஞ்சய் ராவத் கேள்வி


ஆட்சியில் சமபங்கு திட்டம் உருவாக்கப்பட்ட போது பா.ஜனதா தலைவர்களால் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தாரா? அமித்ஷாவுக்கு, சஞ்சய் ராவத் கேள்வி
x
தினத்தந்தி 15 Nov 2019 5:15 AM IST (Updated: 15 Nov 2019 5:13 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியில் சமபங்கு திட்டம் உருவாக்கப்பட்ட போது பாரதீய ஜனதாவில் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தாரா? என அமித்ஷாவுக்கு சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

மும்பை, 

ஆட்சியில் சமபங்கு திட்டம் உருவாக்கப்பட்ட போது பாரதீய ஜனதாவில் மோடி ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தாரா? என அமித்ஷாவுக்கு சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.

அமித்ஷா கருத்து

பாரதீய ஜனதா தேசிய தலைவரும்,மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா, “மராட்டியத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது, மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்-மந்திரி என்று பிரதமர் மோடி பலமுறை கூறினார். நானும் குறைந்தது நூறு தடவையாவது கூறியிருப்பேன். ஆட்சியில் சமபங்கு என்ற சிவசேனாவின் கோரிக்கை ஏற்க முடியாதது” என்று கூறிஉள்ளார்.

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பதிலடி கொடுத்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

மோடி ஒதுக்கி வைக்கப்பட்டாரா?

ஆட்சியில் சமபங்கு திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு சரியான நேரத்தில் அமித்ஷா தெரிவித்திருந்தால், நாங்கள் இன்று இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்க மாட்டோம். மோடி பிரசாரத்தின் போது, தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக தொடருவார் என்று சொல்லியதை நான் கேட்டேன். அதை எங்களுக்கானஅரசியல் செய்தியாக நாங்கள் பார்க்கவில்லை. அதனால் அதை எதிர்க்கவில்லை. பாரதீய ஜனதா, சிவசேனா இடையே நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டின் போது மராட்டிய ஆட்சியில் சமபங்கு திட்டம் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

ஆட்சியில் சமபங்கு திட்டம் குறித்த முடிவு உத்தவ் தாக்கரே வீட்டில் உள்ள மறைந்த பாலாசாகேப் தாக்கரேயின் (பால்தாக்கரே) ஓவிய அறையில் நடந்த அமித் ஷா - உத்தவ் தாக்கரே சந்திப்பில் தான் எடுக்கப்பட்டது.

சிவசேனாவின் கோவில்

அந்த அறை எங்களுக்கு கோவில். சிவசேனாவுக்கு புனித அறை. அந்த கோவிலில் தான் பேச்சுவார்த்தைகள் நடந்தது. அங்கு எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்று கூறினால், அது கோவிலையும், பால்தாக்கரேயையும், மராட்டியத்தையும் அவமதிப்பதாகும்.

நாங்கள் ஒருபோதும் அரசியலை வியாபாரம் ஆக்கியதில்லை. அதை லாபம் மற்றும் நஷ்டம் என்ற கோணத்திலும் பார்க்கவில்லை.அதை நாங்கள் மக்களிடம் பகிரங்கப்படுத்துகிறோம். ஏனெனில் அது எங்களது சுயமரியாதை பற்றியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story