வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கீரனூரில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரனூர்,
கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் புதுவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (வயது 29). இவர் கீரனூரில் உள்ள வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக ரூ.2 லட்சம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், இன்சூரன்ஸ் கார்டு மற்றும் தனது செல்போன் போன்றவற்றை ஒரு பையில் போட்டு, தனது மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு, தனது தந்தை காமராஜை துணைக்கு அழைத்து கொண்டு கீரனூரில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார்.
அப்போது அவர் கொண்டு சென்ற பணத்தைவிட, வங்கியில் அடகு வைத்த நகை மீட்பதற்கான தொகை கூடுதலாக இருந்தது. இதைத்தொடர்ந்து மற்றொரு நாள் வந்து திருப்பி கொள்ளலாம் என பணம், செல்போன் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த பையை மீண்டும் மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு, மொபட்டில் பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து செல்போன் கடைக்கு சென்றார்.
பின்னர் அவர் மோட்டார் மெக்கானிக் கடைக்கு சென்றார். அப்போது அவர் மொபட்டின் சீட்டுக்கு அடியில் இருந்த பையை பார்த்த போது, பை திருடுபோய் இருந்தது. இதைத்தொடர்ந்து ஹேமலதா தான் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று, பை குறித்து விசாரித்தார். ஆனால் பை கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து கீரனூர் போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹேமலதாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தான் மொபட்டில் இருந்து பணம், செல்போன் மற்றும் ஆவணங்கள் இருந்த பையை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கீரனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் மொபட்டில் இருந்து பணம், செல்போன் மற்றும் ஆவணங்கள் இருந்த பையை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story