இன்னும் ஒரு வாரத்தில் மனு கொடுத்த இடங்களிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு


இன்னும் ஒரு வாரத்தில் மனு கொடுத்த இடங்களிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2019 11:00 PM GMT (Updated: 15 Nov 2019 2:44 PM GMT)

இன்னும் ஒருவாரத்தில் மனு கொடுத்த இடங்களிலேயே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மனுநீதி முகாமில் அமைச்சர் விஜய பாஸ்கர் பேசினார்.

அரிமளம்,

அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் திருமயம் தாசில்தார் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, ‘புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பொது மக்களின் இருப்பிடத்திற்கே சென்று முகாம் நடத்தி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, காதொலிக்கருவிகள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களின் மீது பரிசீலனை செய்து உடனடி தீர்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதர கோரிக்கை மனுக்களின் மீது உரிய முறையில் பரிசீலனை செய்து தகுதி உள்ள பயனாளிகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் மனு வழங்கிய இடத்திலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்’. என்றார்.

தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 458 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டிலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 81 பெண்களுக்கு ரூ.20 லட்சம் மானியத்தில் விலையில்லா இருசக்கர வாகனங்கள், 9 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.55 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி தொகைக்கான காசோலைகள், வேளாண்மைத்துறையின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பீட்டில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மானிய விலையில் ரூ.92 ஆயிரம் மதிப்பீட்டில் காய்கறி குழித்தட்டு நாற்றுகள், மா ஒட்டு செடிகள் என மொத்தம் 581 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மகளிர் திட்ட இயக்குனர் லதா, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, அரிமளம் ஒன்றிய செயலாளர் திலகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இன்பவள்ளி திலகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கணேசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story