திருவண்ணாமலையில் அயோத்தி தீர்ப்பை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 55 பேர் கைது
அயோத்தி தீர்ப்பை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 55 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை,
அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்பட்ட 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.
இதனை கண்டித்து நேற்று திருவண்ணாமலையில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க திருவண்ணாமலை நகரத்தில் மக்கள் கூடும் பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரை இணைக்கும் 9 இணைப்பு சாலைகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் அறிந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், வனிதா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் என 150-க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டு இருந்தனர்.
சுமார் 5 மணியளவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக அறிவொளி பூங்கா அருகே வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி திருவண்ணாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதில் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story