போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்


போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 15 Nov 2019 11:30 PM GMT (Updated: 15 Nov 2019 6:02 PM GMT)

போலியாக கையெழுத்திட்டு ஏ.டி.எம். கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சியில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி, 

திருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முகமது கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

அந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

இதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.

வங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர்.

இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம்குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், தங்களது வங்கி அதிகாரிகள் முறைகேடாக வாடிக்கையாளர் பணத்தை கையாடல் செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்தார்.தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், மரணம் அடைந்த பெண் வாடிக்கையாளரின் பெயரிலான சேமிப்பு தொகையை அந்த வங்கியின் அதிகாரிகளே கையாடல் செய்த சம்பவம் சக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் இடையே மட்டுமல்லாது வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

Next Story