பொறையாறு அருகே விபத்து: பஸ், வயலில் கவிழ்ந்தது, டிரைவர் உள்பட 11 பயணிகள் காயம்


பொறையாறு அருகே விபத்து: பஸ், வயலில் கவிழ்ந்தது, டிரைவர் உள்பட 11 பயணிகள் காயம்
x
தினத்தந்தி 16 Nov 2019 4:15 AM IST (Updated: 16 Nov 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

பொறையாறு அருகே வயலில் பஸ் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 11 பயணிகள் காயம் அடைந்தனர்.

பொறையாறு, 

காரைக்காலில் இருந்து சிதம்பரத்தை நோக்கி நேற்று காலை ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பொறையாறு அருகே நண்டலாறு சோதனைசாவடியை கடந்து சென்றபோது எதிரே வந்த காருக்கு வழிவிட பஸ்சை டிரைவர் ஒதுக்கி உள்ளார் அப்போது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பனை மரங்கள் மீது மோதியது. இதில் பனை மரங்களுடன் பஸ் வயலில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சாலையில் சென்றவர்கள் பயணிகளை மீட்க முயற்சி செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து பொறையாறு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை வீரர்கள் விரைந்து சென்று போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பயணிகளை மீட்டனர்.

பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜன் (வயது 39) என்பவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பஸ் பயணிகள் 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் பொறையாறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கண்டக்டர் அன்பரசன் காயமின்றி தப்பினார். கவிழ்ந்த பஸ் பொக்லின் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் சென்னை-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story