உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 15 Nov 2019 10:30 PM GMT (Updated: 15 Nov 2019 7:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.

தூத்துக்குடி, 

தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. விருப்ப மனு வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், அமைப்பு செயலாளர்கள் சி.த.செல்லப்பாண்டியன், என்.சின்னத்துரை மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், கவுன்சிலர் பதவிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம், பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500-ம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ.3 ஆயிரமும் கட்டணம் செலுத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை பெற்று சென்றனர். மாநகராட்சி மேயர் பதவிக்கு மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை விருப்பமனு வாங்கினார்.

தொடர்ந்து இன்றும்(சனிக்கிழமை) விருப்ப மனுக்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, கோவில்பட்டி கிரு‌‌ஷ்ணா நகர் எல்.வி.ஆர். கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று நடந்தது. மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சின்னப்பன் எம்.எல்.ஏ., மாநில மாணவர் அணி துணை செயலாளர் சோலை கண்ணன் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கினர்.

நூற்றுக்கணக்கான அ.தி.மு.க.வினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மனுக்களை ஆர்வமுடன் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். தொடர்ந்து இன்றும் (சனிக்கிழமை) அ.தி.மு.க.வினர் மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க உள்ளனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ செய்து உள்ளார்.

Next Story