திருவாரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்


திருவாரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Nov 2019 10:15 PM GMT (Updated: 15 Nov 2019 7:47 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர்.

கொரடாச்சேரி,

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளித்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நகரசபை தலைவர், நகரசபை உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் நேற்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான காமராஜ் தலைமை தாங்கி விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சரும், மீனவர் அணி செயலாளருமான கே.ஏ.ஜெயபால் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான அ.தி.மு.க.வினர் விருப்ப மனு அளித்தனர். விண்ணப்பித்தவர்கள் கட்சி தலைமையால் அறிவித்து இருந்தபடி விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர். நகரசபை தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 ஆயிரம், நகரசபை உறுப்பினருக்கு ரூ.2,500, பேரூராட்சி தலைவர் பொறுப்புக்கு ரூ.5 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினருக்கு ரூ.1,500, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொறுப்புக்கு ரூ.5 ஆயிரம், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ரூ. 3 ஆயிரம் என விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி தங்களுடைய விருப்ப மனுக்களை அளித்தனர்.

இந்த விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி இன்றும் (சனிக்கிழமை) நடக்கிறது.

Next Story