பேஸ்புக் மூலம் காதல்: திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் பறிப்பு - என்ஜினீயர் கைது
பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றி, பெண்ணிடம் நகை-பணம் பறித்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையை சேர்ந்தவர் சியாமளா (வயது 31). பிசியோதெரபி நிபுணராக உள்ளார். சியாமளா தனது கணவரை பிரிந்து வாழ்கிறார்.
சியாமளாவிடம் பேஸ்புக் மூலம் சென்னையை அடுத்த மீஞ்சூரை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40) என்பவர் பழகி வந்தார். ஜெயச்சந்திரன் டிப்ளமோ என்ஜினீயர். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரடியாக தனிமையில் சந்தித்து கொண்டனர். ஒருகட்டத்தில் சியாமளாவை திருமணம் செய்துகொள்வதாக ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஜெயச்சந்திரனும் அவரது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். சியாமளாவும், ஜெயச்சந்திரனை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார்.
திருமண ஆசையில் சியாமளா, ஜெயச்சந்திரனுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்து உதவியுள்ளார்.
புதிதாக லேப்டாப் ஒன்றும் வாங்கி கொடுத்துள்ளார். ஜெயச்சந்திரன் கேட்டுக் கொண்டதன்பேரில் சியாமளா தனது வைர நகைகளையும் கொடுத்துள்ளார். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் காதலில் முறிவு ஏற்பட்டது. சியாமளாவை திருமணம் செய்துகொள்ள ஜெயச்சந்திரன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமண ஆசையில் ஜெயச்சந்திரனிடம் நகை மற்றும் பணத்தை பறிகொடுத்த சியாமளா சென்னை மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் இந்த புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story