மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தை முஸ்லிம்கள் முற்றுகை - சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட 221 பேர் கைது


மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தை முஸ்லிம்கள் முற்றுகை - சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட 221 பேர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட்ட 221 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருத்தாசலம்,

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு கூறியது. பாபர் மசூதி தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று கூறியும், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்து மங்கலம்பேட்டையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுவரொட்டி ஒட்டிய 3 பேரை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

இதுபற்றி அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயலாளர் ஆபிரூதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவர் அன்வர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விருத்தாசலம் தொகுதி செயலாளர் உசேன், நகர தலைவர் அப்துல் ரவூப் மற்றும் முஸ்லிம்கள் மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், 3 பேரை விடுவிக்கக்கோரி கோஷமிட்டனர்.

இவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வந்து விசாரணை நடத்திய பிறகுதான் 3 பேரை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதனை ஏற்காத முஸ்லிம்கள், மங்கலம்பேட்டை புதிய பள்ளிவாசல் பகுதியில் போலீசாரை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை ஒட்டி கோ‌‌ஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சிதம்பரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அந்த அந்த அமைப்பினர் அறிவித்தனர். எனவே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிதம்பரம் கார்த்திகேயன், சேத்தியாத்தோப்பு ஜவஹர்லால் ஆகியோர் மேற்பார்வையில் சிதம்பரம் காந்தி சிலை அருகே 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் சிதம்பரம் வண்டிகேட், கஞ்சித்தொட்டி, பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வும் நேரில் வந்தார்.

இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள், சிதம்பரம் வண்டிகேட் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாத் அமைப்பு, தேசிய மகளிர் அமைப்பு, எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்த 221 பேரை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றிச்சென்று அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் இரவு 7 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

Next Story