ரெட்டியார்பாளையத்தில், என்ஜினீயர் வீட்டில் தங்க நகைகள் திருட்டு - நண்பருக்கு வலைவீச்சு
ரெட்டியார்பாளையத்தில் என்ஜினீயர் வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போயின. அது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மூலக்குளம்,
புதுவை ரெட்டியார்பாளையம் சாரதாம்பாள் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருண்பாபு (வயது 41). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய நண்பர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ரத்னாகர் ரெட்டி. இவர் புதுவையை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று தனது நண்பர் அருண்பாபுவிடம் தெரிவித்தார்.
உடனே அவர், ரத்னாகர் ரெட்டியை புதுவைக்கு அழைத்து வந்து புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அறையில் எடுத்து கொடுத்து புதுவையை சுற்றி காண்பித்தார். அப்போது அருண்பாபு தனது வீட்டிற்கு ரத்னாகர் ரெட்டியை அழைத்து சென்று மதிய உணவு வழங்கினார். சிறிது நேரத்தில் அவர் விடுதிக்கு செல்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் அருண்பாபு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதனால் அவருக்கு தனது வீட்டிற்கு வந்த நண்பர் ரத்னாகர் ரெட்டி மீது சந்தேகம் வந்தது. உடனே ரத்னாகர் ரெட்டி தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை. விடுதி ஊழியர்களிடம் விசாரித்தபோது ரத்னாகர் ரெட்டி அறையை காலி செய்துவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அருண்பாபு புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்னாகர் ரெட்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story