பணிநிரந்தரம் செய்யக்கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்
பணிநிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க தலைவி பரமேஸ்வரி தலைமை தாங்கினார்.
இதில் செயலாளர் தமிழரசி, பொருளாளர் பூங்கோதை மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சம்மேளன செயல் தலைவர் ஆனந்தராசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டம் நேற்று மாலை 5 மணி வரை நடந்தது.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
8 ஆண்டுகள் பணிமுடிந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். பல ஆண்டுகள் உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊழியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
உதவியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீதம் நிலுவை தொகை, அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள், 2018, 2019-ம் ஆண்டுக்கான போனஸ் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
Related Tags :
Next Story