புஞ்சைபுளியம்பட்டியில் ஓடும் ஆம்புலன்சில் டிரைவர் திடீர் சாவு


புஞ்சைபுளியம்பட்டியில் ஓடும் ஆம்புலன்சில் டிரைவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 16 Nov 2019 10:45 PM GMT (Updated: 16 Nov 2019 2:54 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டியில் இறந்தவரின் உடலை மின்மயானத்துக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தபோது திடீரென டிரைவர் இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி, 

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 45). இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஷாஜகானும், வசந்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். புஞ்சைபுளியம்பட்டியில் மின்மயானம் உள்ளது. இந்த மின்மயானத்துக்கு சொந்தமான ஆம்புலன்சில் டிரைவராக ஷாஜகான் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை மாவட்டம் தொட்டிபாளையத்தில் ஒருவர் இறந்துவிட்டார். அவரின் உடலை தகனம் செய்வதற்காக ஷாஜகான் புஞ்சைபுளியம்பட்டி மின்மயானத்துக்கு ஆம்புலன்சில் ெகாண்டு வந்துகொண்டு இருந்தார். இறந்தவரின் உறவினர் ஒருவர் ஷாஜகானின் அருகே அமர்ந்து வந்தார்.

புஞ்சைபுளியம்பட்டியை நெருங்கியபோது, திடீரென ஷாஜகானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்சை அவரால் இயக்க முடியவில்லை. மேலும் வண்டி அங்கும், இங்கும் தடுமாறி ஓடியது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது லேசாக ஆம்புலன்ஸ் உரசியது.

ஆனாலும் ஷாஜகான் வலியை பொறுத்துக்கொண்டு ஆம்புலன்சை சாமர்த்தியமாக ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் படுத்துக்கொண்டார்.

இதைப்பார்த்த அருகே அமர்ந்து வந்தவர் மற்றவர்களிடம் இதுபற்றி கூறினார். உடனே வேறு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஷாஜகான் அதில் ஏற்றி கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஷாஜகானின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், மகன்களும் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story