சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள் சித்தராமையா பேட்டி


சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

மைசூரு, 

சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

சித்தராமையா பேட்டி

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, உன்சூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். பின்னர் அவர் உன்சூர் தொகுதி காங்கிர சாருடன் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து அவர் மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இரவில் தங்கினார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க விலை போன எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் 15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற 8 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஆனால் அவ்வளவு தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற போவதில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர்களின் ஆட்டத்தை காண மக்களும் தயாராகி உள்ளனர். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் புறக்கணிப்பார்கள்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் தான், பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். இதனால் இடைத்தேர்தலில் முறைகேடு செய்ய பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்களை வினியோகிக்க தயாராகி உள்ளனர். இதற்கு மைசூருவில் ஒரு குடோனில் பா.ஜனதாவினர் பதுக்கி வைத்திருந்த 30 ஆயிரம் சேலைகள் சிக்கிய சம்பவமே சாட்சி.

கட்சி மாறியவர்கள், தியாகிகளா?

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதாவினர் ஆபரேஷன் தாமரை நடத்தினார்கள் என்று நாங்கள் கூறினோம். ஆனால் பா.ஜனதா வினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக உண்மைகளை அவர்களது வாயால் கூறி வருகிறார்கள். நாங்கள் தகுதி நீக்கப்பட்டவர்கள் அல்ல எனக் கூறி கொண்டு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சென்றாலும், அவர்களை மக்கள் தகுதி நீக்க எம்.எல்.ஏ. என்று தான் அழைப்பார்கள். ரமேஷ் ஜார்கிகோளியின் பேச்சை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை, பா.ஜனதாவினர் தான் தியாகிகள் என்று புகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் என்ன நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தார்களா?. பணம் மற்றும் பதவிக்கு ஆசைப்பட்டு ஒரு கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றொரு கட்சிக்கு சென்றவர்கள். அவர்கள் எப்படி தியாகிகள் ஆவார்கள்?.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story