கந்தர்வகோட்டையில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் சிறப்பு மனுநீதி முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை புதிய பஸ் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பேசும்போது, ‘மாவட்டம் முழுவதும் பொது மக்களின் இருப்பிடத்திற்கே சென்று முகாம் நடத்தி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்து உடனடி தீர்வு பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.
முகாமில் வருவாய்த்துறை சார்பில் 309 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 70 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பீட்டிலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 20 மகளிருக்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா இருசக்கர வாகனங்களும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி தொகைக்கான காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருங்களூர் கிராமத்தில் ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் ஆத்மா தலைவர் ரெங்கராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் சதீஸ், கந்தர்வகோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குமரன், காமராஜ் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 18 படுக்கைகள் கொண்ட புதிய அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய கட்டிடத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் அவர் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு 558 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பழனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story