திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வயலூர் கிராமத்தை சேர்ந்த அன்புராஜா என்கிற டீசல்ராஜா என்பவர் தகாத வார்த்தையால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு வீடியோ காட்சியாக பதிவிட்டு, அதனை சமூக வலைத்தளங்களிலும் பரப்பியுள்ளாராம். இதனால் டீசல்ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீசல்ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில், அக்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தகாத வார்த்தையால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்த டீசல்ராஜாவை கண்டித்தும், அவரை உடனடியாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 20 பேரை கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தினர்.

இதேபோல் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வெற்றியழகன் உள்ளிட்ட 12 பேரை அரும்பாவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் களரம்பட்டியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுத்தமல்லி பிரிவு ரோட்டில் உள்ள கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பொன்.தங்கராசு தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பாலு, வடிவேல், குணசேகரன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story