தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே குறிக்கோள் தினேஷ் குண்டுராவ் பேட்டி
காங்கிரஸ் தலைவர்களின் முதுகில் குத்திய தகுதி நீக்க எம்.எல்.ஏ. க்களை இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே குறிக்கோள் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் தலைவர்களின் முதுகில் குத்திய தகுதி நீக்க எம்.எல்.ஏ. க்களை இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே குறிக்கோள் என்று மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
குழப்பமோ, பிரச்சினையோ இல்லை
இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எந்த குழப்பமோ, பிரச்சினையோ இல்லை. வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான ஆலோசனை முடிந்துள்ளது. 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ‘பி‘ பாரமும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 7 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை இறுதி செய்ய வேண்டியது உள்ளது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லிக்கு சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினேன்.
கட்சி மேலிட தலைவர்கள் அனுமதி வழங்கியவுடன் எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம். பெங்களூரு கே.ஆர்.புரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் என்னை சந்தித்து ‘பி‘ பாரம் பெற்று சென்றுள்ளார். இடைத்தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களே பிரசாரம் செய்வார்கள். மேலிட தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வர மாட்டார்கள்.
மனைவி போட்டியிடவில்லை
பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் எனது மனைவி வேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அந்த தொகுதியில் எனது மனைவி போட்டியிட இருப்பதாக வரும் தகவல்கள் உண்மையில்லை. அதுபோன்ற தகவல்கள் எப்படி வெளியாகிறது என்பது தெரியவில்லை. என்னுடைய மனைவிக்கு தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த விதமான ஆலோசனையும் நடைபெறவில்லை. அதுபற்றி முதலிலேயே ஆலோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். இடைத்தேர்தலில் எனது மனைவி சிவாஜிநகர் தொகுதியில் போட்டியிடவில்லை.
ரோஷன் பெய்க் எதற்காக பா.ஜனதா கட்சிக்கு சென்றார்? என்பது தெரியவில்லை. காங்கிரசில் அவரது பேச்சுக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் காங்கிரசில் இருந்து அவர் விலகிவிட்டார். சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க் ஆதரவை பெற காங்கிரஸ் விரும்பவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. கோகாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகன் ஜார்கிகோளிக்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ஆதரவு அளித்திருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
தோற்கடிப்பதே குறிக்கோள்
எம்.டி.பி.நாகராஜுக்கு காங்கிரஸ் கட்சி எல்லா பதவிகளையும் வழங்கியுள்ளது. மந்திரி, வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அவர் காங்கிரசில் இருந்து விலகியது ஏன்? என்று தெரியவில்லை. எம்.டி.பி.நாகராஜே தனது கழுத்தை தானே அறுத்து கொண்டுள்ளார்.
கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததுடன், காங்கிரஸ் தலைவர்களின் முதுகில் குத்திவிட்டு தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளனர். அவர்களை இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாகும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு இடைத்தேர்தலில் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.
Related Tags :
Next Story