மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி + "||" + Near Nilakkottai Drowned in the river Vaigai Brother-brother death

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியானார்கள். ஆற்றில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற முயன்றபோது அவர்களுக்கு இந்த துயர சம்பவம் நடந்து விட்டது.
நிலக்கோட்டை, 

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன்கள் ஜெகன் என்ற சதீஷ்குமார் (வயது 36), குமரேசன் (32). இதில் ஜெகனுக்கு திருமணமாகி புவனா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். குமரேசனுக்கு தீபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சகோதரர்கள் 2 பேரும் தங்களது தந்தையுடன் வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜவுளி வியாபாரம்செய்து வந்தனர்.

மாரியப்பனின் சொந்த ஊர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி. இதனால் அவர் தனது குடும்பத்தினருடன் அவ்வப்போது பழனி முருகன் கோவில் மற்றும் அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட வருகை தருவார். அதன்படி மாரியப்பன் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் பழனிக்கு வந்தார்.

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்த அவர்கள், நேற்று காலை நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர். அங்கு அவர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள வைகை ஆற்றில் குளித்து கொண்டிருந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி பரிதவித்தார். மேலும் அவர் தன்னை காப்பாற்றுங்கள் என்று அபயகுரல் எழுப்பினார். இதனை கேட்ட ஜெகனும், குமரேசனும் வேகமாக சென்று ஆற்றில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றி, கரைக்கு வர செய்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சகோதரர்கள் 2 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நீரில் மூழ்கிய ஜெகனும், குமரேசனும் பரிதாபமாக இறந்து போனார்கள். இவர்கள் 2 பேரும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேசுவரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜெகன், குமரேசன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து சாமி கும்பிடுவதற்காக அணைப்பட்டி வந்தவர்கள், ஆற்றில் மூழ்கிய பெண்ணை காப்பாற்ற முயன்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.