கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி


கோவையில் விபத்து: லாரி சக்கரத்தில் சிக்கி 2 பெண் குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 17 Nov 2019 5:00 AM IST (Updated: 17 Nov 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தையின் கண்முன்னே 2 பெண் குழந்தைகள் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கணபதி,

தர்மபுரி மாவட்டம் அரூர் ராமையநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 36), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (28). இவர்களுக்கு கார்த்திக் (10) என்ற மகனும், காயத்ரி (9), கீர்த்தனா (7) ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.

வெங்கடேஷ், கோவை ரத்தினபுரி அருள்நகரில் உள்ள ஒரு காலி இடத்தில் செட் அமைத்து தனது குடும்பத்தினருடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கார்த்திக் ரத்தினபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். காயத்ரி அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 4-ம் வகுப்பும், கீர்த்தனா அதே பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

வெங்கடேசின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவருடைய குடும்பத்தினர் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேலம்மாள் நகர் பகுதியில் இருக்கும் மாநகராட்சி கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.

நேற்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 8.30 மணியளவில் வெங்கடேஷ் தனது குழந்தைகள் கார்த்திக், காயத்ரி, கீர்த்தனா ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மாநகராட்சி கழிப்பறை நோக்கி சென்றார். அவர்கள், காந்திஜீ ரோடு வேலம்மாள் நகர் தயிர் இட்டோி ரெயில்வே சுரங்கப்பாதையில் சென்றபோது எதிரே மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வெங்கடேஷ் உள்பட 4 பேரும் தூக்கிவீசப்பட்டனர். சாலையில் விழுந்த காயத்ரி, கீர்த்தனா ஆகியோரது தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் காயத்ரி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தாள். கீர்த்தனா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். வெங்கடேஷ் படுகாயம் அடைந்தார். ஆனால் கார்த்திக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினான்.

இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது குறித்த தகவலின் பேரில் போக்குவரத்து கிழக்கு பகுதி புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் பத்ராச்சலம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், அங்கு தலை நசுங்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த கீர்த்தனா மற்றும் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கீர்த்தனா பரிதாபமாக இறந்தாள்.

விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடேசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பலியான காயத்ரி, கீர்த்தனா ஆகியோரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த வெங்கடேசின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள், குழந்தைகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு இருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இந்த விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சியை சேர்ந்த லாரி டிரைவர் கணேஷ் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக கோவை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை கண் முன் 2 குழந்தைகள் தலை நசுங்கி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story