திருவாடானை தாலுகா ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை


திருவாடானை தாலுகா ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Nov 2019 10:15 PM GMT (Updated: 16 Nov 2019 7:06 PM GMT)

திருவாடானை தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டி, 

திருவாடானையில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 400 முதல் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த ஆஸ்பத்திரியில் 3 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் ஒரு பெண் டாக்டர் மாற்றுப்பணி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருகிறது. மேலும் அறுவை சிகிச்சை டாக்டர் இல்லாததால் ஆபரேஷன் தியேட்டர் இருந்தும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்காமல் இருந்து வருகிறது.

தற்போது இங்கு எலும்பு அறுவை சிகிச்சை டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளதால் எலும்பு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுமே நீண்ட காலத்துக்குப் பின் தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வேறு பாதிப்புகளுக்கு சிறிய அளவில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு கூட ராமநாதபுரம், மதுரை, காரைக்குடி போன்ற நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது.

எனவே சுமார் 62 படுக்கை வசதியை கொண்ட இந்த மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து டாக்டர் போன்ற பணியிடங்களையும், கூடுதல் டாக்டர் பணியிடங்களையும் நியமித்து 24 மணி நேரமும் இந்த பகுதி மக்களுக்கு சரியான முறையில் மருத்துவ வசதி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல இங்கு 2 லேப் டெக்னீசியன் பணியிடங்கள் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கை மையத்தில் அனைத்து பரிசோதனைகளும் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது. இங்கு ஒரு லேப் டெக்னீசியன் மட்டுமே பணியில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் இங்குள்ள நம்பிக்கை மையத்தில் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதால் நீண்ட நேரம் ஆகிறது.

எனவே டாக்டர்கள், நர்சுகள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோரை கூடுதலாக பணியமர்த்த தமிழக அரசு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை உயரதிகாரிகள் ஆகியோருக்கு ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story