போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி அளித்த மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரை,
சேலம் நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமசாமி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான் கடந்த 1979-ம் ஆண்டு நேரடி பணி நியமனத்தில் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றேன். பல வருடங்களாக போலீஸ்துறையில் பணியாற்றியுள்ளேன். ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை செய்து 3 பேரை கைது செய்துள்ளேன். மேலும் போலீஸ்துறையில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி அரசிடம் இருந்து பல விருதுகள் மற்றும் வெகுமதிகள் பெற்றுள்ளேன். இந்தநிலையில் 2009-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன்.
அப்போது, நெடுஞ்சாலையில் வாகன சோதனையின்போது லஞ்சம் வாங்கியதாக எனக்கு ‘மெமோ’ வழங்கப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பின்னர் அந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக கூறி எனது சம்பள உயர்வில் பிடித்தம் செய்வதற்கு அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக மேல் அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அதை தொடர்ந்து சம்பளத்தில் சிறு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதனால் எனது பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் ஓய்வூதியம் பெற்று வருவதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமசாமி மதுரை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், அரசு பணியாளர் சார்ந்த வழக்குகளில் பொதுநல வழக்கைப்போல, அரசுக்கு பொதுவான உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. மேலும் மனுதாரர் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story