தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்திய விவசாயி கைது - 5 பேர் தப்பி ஓட்டம்


தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்திய விவசாயி கைது - 5 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 5:17 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்திய விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 5 பேர் தப்பி ஓடினர்.

தேன்கனிக்கோட்டை, 

தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரண்டஅள்ளி வனப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக தேன்கனிக்கோட்டை வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன், வனகாப்பாளர் ஆறுமுகம் மற்றும் வன காவலர்கள் கொண்ட குழு மாரண்டஅள்ளி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். வனத்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓடினார்.

உடனே அவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரனை நடத்தியதில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கென்டேனஅள்ளி அடுத்துள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் (வயது 36), என்பதும் அவருடன் அதேபகுதியை சேர்ந்த முரளி, பாபு, பெரியசாமி, பச்சையப்பன், கணேசன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மாரண்ட அள்ளி வனப்பகுதியில் உள்ள புறாக்கல் என்ற இடத்தில் 7 வேங்கை மரங்களை வெட்டி அதன் மரத்துண்டுகள் கடத்தி சென்றதையும் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து மரங்கள் வெட்டிய இடத்தை வனத் துறையினர் பார்வையிட்டனர். அங்கு 7 வேங்கை மரங்களை வெட்டி கடத்தி இருந்தத தெரியவந்தது. இதையடுத்து கணேசனை வனத்துறையினர் கைது செய்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.

Next Story