தாளவாடி அருகே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


தாளவாடி அருகே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறு; அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 5:17 PM GMT)

தாளவாடி அருகே மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தாளவாடி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சுஜித் என்ற குழந்தை தவறி விழுந்து பலியானது.இதைத்ெ்தாடர்ந்து தமிழ்நாட்டில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் பல இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி ஈரோடு மாவட்ட நிர்வாகமும் எடுத்து வருகிறது. மேலும் பாதுகாப்பு இல்லாத ஆபத்தான ஆழ்துளை கிணறுகளை கண்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் கதிரவன் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் தாளவாடியை அடுத்த மல்லன்குழி ஊராட்சிக்கு உள்பட்ட மெட்டல்வாடியில் இருந்து கர்நாடக மாநிலம் பிசில்வாடி செல்லும் ரோட்டில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது தண்ணீர் இல்லாததால் இந்த ஆழ்துளை கிணறு பயனற்று கிடக்கிறது. ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றை மூடி வைத்து மூடாமல் மரக்கட்டையை வைத்து மூடி உள்ளனர்.

இதேபோல் தாளவாடியை அடுத்த குருபரகுண்டி கிராமத்திலும் மக்கள் நடமாட்டம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றின் மீது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு கல்லை தூக்கி வைத்து உள்ளனர்.

மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே இனிமேலாவது தாளவாடி அருகே மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story