தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி


தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 5:41 PM GMT)

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் நேற்று சிறப்பு யாகம் மற்றும் வழிபாடு நடத்தினார். பின்னர் கோபூஜை, பரிவார பூஜைகளை நடத்தினார். பின்னர் அவர் யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டார். இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட துணை செயலாளர் காந்தி தலைமையில் சிறப்பு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு சத்யநாராயணராவ் கெய்க்வாட் அன்னதானம் வழங்கினார். இதில் கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற மாநில தலைவர் சந்திரகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணராவ் கெய்க்வாட் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உலக நன்மைக்காகவும், அனைவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவும் காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினேன். நடிகர் ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்குவார். அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார். மக்களுக்கு எது நடந்தாலும் அங்கே நேரடியாக சென்று அவர்களுக்கு உதவுவார். அவர் குழந்தை உள்ளம் கொண்டவர்.

தமிழக மக்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். இதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாக ரஜினிகாந்த் கூறிய கருத்து தற்போது அனைவரிடமும் விவாத பொருளாக உள்ளது. அரசியல் வெற்றிடம் இருப்பது குறித்து மக்கள்தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story