தூத்துக்குடி-திருச்செந்தூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதி - சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி


தூத்துக்குடி-திருச்செந்தூரில் பலத்த மழை குடியிருப்பு பகுதி - சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 18 Nov 2019 4:00 AM IST (Updated: 18 Nov 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி-திருச்செந்தூர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி-திருச்செந்தூர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடியில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றக் கோரி மக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

பலத்த மழை

தூத்துக்குடி மாநகரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மாநகரில் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் தெரு மற்றும் லூர்தம்மாள் புரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதியிலும், சாலைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றக் கோரி நேற்று காலை செயிண்ட் மேரிஸ் தெரு மக்கள், தாளமுத்துநகர் ரோட்டில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் காலை 10.30 மணி வரை பலத்த மழை கொட்டியது. இதனால் திருச்செந்தூர் நகர சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராஜ்கண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

ஏரல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை சாரல் மழை பெய்து வந்தது. உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தண்டபத்து, செட்டியாபத்து, பிச்சிவிளை, தாண்டவன்காடு, சிறுநாடார் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் உடன்குடியின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது.

ஆறுமுகநேரி

அதேபோல் குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து காலை 10 மணி வரை மிதமான மழை பெய்தது. ஆறுமுகநேரி பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுமுகநேரி மெயின் ரோடு, பள்ளிவாசல் பஜார், அடைக்கலாபுரம் சாலை, தூத்துக்குடி செல்லும் சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

Next Story