வேடசந்தூர் அருகே, தனியார் பால் நிறுவனத்தில் தொழிலாளி சாவு - சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மறியல்


வேடசந்தூர் அருகே, தனியார் பால் நிறுவனத்தில் தொழிலாளி சாவு - சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 6:50 PM GMT)

தனியார் பால் நிறுவனத்தில் இறந்த தொழிலாளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் அருகே உள்ள அடைக்கனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 41). இவர் வேடசந்தூர் அருகே உள்ள சித்தமரம்நால்ரோட்டில் தனியார் பால் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுடைய மகள் கவுசல்யா.

வேடசந்தூர் ஆர்.எச்.காலனியில் பெரியசாமி குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பெரியசாமி தனியார் பால் நிறுவனத்துக்கு பணிக்கு சென்றார். பின்னர் இரவு நேரத்தில் பெரியசாமி மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளதாகவும் தனியார் பால் நிறுவனத்தினர் பெரியசாமியின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை பெரியசாமியின் உறவினர்கள், வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். மருத்துவமனை வளாகத்தில் வைத்திருந்த பெரியசாமியின் உடலை பார்த்து மணிமேகலை கதறி அழுதார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உறவினர்கள் மணிமேகலையின் முகத்தில் தண்ணீரை தெளித்து ஆசுவாசப்படுத்தினர்.

இதற்கிடையே பெரியசாமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள், மருத்துவமனை முன்பு வேடசந்தூர்-வடமதுரை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெரியசாமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு பெரியசாமியின் உடலை வாங்கிச் சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story