பெரும்பாறை, பெரியூர் பகுதிகளில், அட்டகாசம் செய்த காட்டுயானைகள் பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு


பெரும்பாறை, பெரியூர் பகுதிகளில், அட்டகாசம் செய்த காட்டுயானைகள் பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 3:45 AM IST (Updated: 18 Nov 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை, பெரியூர் பகுதியில் அட்டகாசம் செய்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் விரட்டினர்.

பெரும்பாறை, 

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், நடுப்பட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, சேம்படிஊத்து, ஆடலூர் உள்ளிட்ட வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், தோட்டங்களுக்குள்ளும் புகுந்து வருகிறது. குறிப்பாக காட்டுயானைகள் தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி, சோலார் வேலிகளை உடைத்து கொண்டு அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள காபி, வாழை, மிளகு, ஆரஞ்சு, சவ்சவ், அவரை, பீன்ஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 67) கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுயானை தாக்கி பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் பெரும்பாறை, பெரியூர் பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்ட வேண்டும் என்று பெரியூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில் கன்னிவாடி வனவர் தண்டபாணி, வனக்காப்பாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் பெரும்பாறை, பெரியூர், நடுப்பட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, சேம்படிஊத்து பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர். இருப்பினும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும், தோட்டங்களுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Next Story