கெங்கவல்லி அருகே மொபட் மீது பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


கெங்கவல்லி அருகே மொபட் மீது பஸ் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2019 4:30 AM IST (Updated: 18 Nov 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே மொபட் மீது பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

கெங்கவல்லி, 

சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 50). இவர் மின்வாரியத்தில் ஆய்வாளராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (40). மகள் நித்யா (18), மகன் சக்திவேல் (16). இதில் நித்யா தலைவாசலில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சக்திவேல் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சின்னதம்பிக்கும், சந்திராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்திரா கணவரை விட்டு பிரிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீரகனூர் அருகே வெள்ளையூரில் மகன், மகளுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சக்திவேலின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் சின்னதம்பியிடம் சென்று பணம் கேட்க சந்திரா முடிவு செய்தார். இதற்காக நேற்று அதிகாலை 5 மணியளவில் சந்திரா மகன், மகளுடன் கெங்கவல்லிக்கு புறப்பட்டார். மொபட்டை சக்திவேல் ஓட்டினார். பின்புறம் சந்திராவும், நித்யாவும் உட்கார்ந்து இருந்தனர்.

கெங்கவல்லி அருகே தெடாவூர் காமராஜர் நகர் பகுதியில் சென்றபோது கெங்கவல்லியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சந்திரா, நித்யா, சக்திவேல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பலியான சந்திரா, நித்யா, சக்திவேல் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்தநிலையில் விபத்து தொடர்பாக தனியார் பஸ் டிரைவர் தெடாவூரை சேர்ந்த அருணகிரி (52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story