காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில்: இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 17 Nov 2019 10:45 PM GMT (Updated: 17 Nov 2019 7:08 PM GMT)

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

ஆவடி,

ஆவடி பிருந்தாவன் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 62). ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எப். ஊழியர். இவருடைய மகள் ராதா (23). அதேபோல் சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த முஸ்தபா என்பவருடைய மகன் பாலாஜி (27). இவர், சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

ராதாவும், பாலாஜியும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

இதையடுத்து ராஜா, தனது மகள் மற்றும் மருமகனை தனது வீட்டிலேயே தங்கவைத்தார். அதன்பிறகு ராஜா, பாலாஜியின் தந்தை முஸ்தபாவுக்கு போன் செய்து இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அழைத்தார்.

அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு முஸ்தபா, ராஜா வீட்டுக்கு வந்தார். அப்போது அவர், தனது மகள் திருமணம் முடிந்த பிறகு, இவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று கூறி பாலாஜியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று விட்டார்.

அதன்பிறகு பாலாஜியின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. பாலாஜிக்கு ராதா பலமுறை தொடர்பு கொண்டும் பேச முடியாததால் நேரில் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முஸ்தபா, அவரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த ராதா, நேற்று காலை தனது பெற்றோர் தேவாலயத்துக்கு சென்று இருந்த நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவாலயத்தில் இருந்து வீட்டுக்கு வந்த அவரது பெற்றோர், தங்கள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ராதாவுக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆவதால் இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Next Story