கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; போக்குவரத்து பாதிப்பு
தொல்.திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீன்சுருட்டி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் (தனி) தொகுதியின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவனை குன்னம் தாலுகா வயலூர் கிராமத்தை சேர்ந்த டீசல் ராஜா, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள வட்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கன் தோண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் ஒரு வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் இந்த மூவரையும் கைது செய்யக்கோரி நேற்று காலை 11 மணியளவில் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அரியலூர் மாவட்ட துணை செயலாளர் கதிர்வளவன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் வேப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கதிரவன் தலைமையில், மாநில துணை செயலாளர் நீதிவள்ளல், மாவட்ட அமைப்பாளர் புதியவன் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியினர் அகரம்சீகூர் பஸ் நிலையம் அருகே அரியலூர்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாத்திக்கப்பட்டது.
Related Tags :
Next Story