மூலைக்கரைப்பட்டியில் பரபரப்பு சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் சேதம்
மூலைக்கரைப்பட்டியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் சேதம் அடைந்தது.
இட்டமொழி,
மூலைக்கரைப்பட்டியில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் சேதம் அடைந்தது.
பயங்கர வெடி சத்தம்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 48). நகர அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர். இவருடைய மனைவி ராதிகா (38). மூலைக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர். இவர்களுக்கு முத்து நாச்சியார் (22) என்ற மகளும், சுபாஷ் (18) என்ற மகனும் உள்ளனர். முத்துநாச்சியார் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். சுபாஷ் தெற்கு விஜயநாராயணம் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராமலிங்கம், அவரது மனைவி ராதிகா, மகன் சுபாஷ் ஆகியோர் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் முத்துராமலிங்கம் வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் மூலைக்கரைப்பட்டி ஊர் முழுவதும் கேட்டுள்ளது.
3 வீடுகள் சேதம்
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துராமலிங்கமும், ஊர் பொதுமக்களும் சத்தம் கேட்ட இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறி இருந்தது தெரியவந்தது.
இதில் முத்துராமலிங்கம் வீட்டின் மேற்கூரை, வீட்டு கதவு, ஜன்னல் கண்ணாடி, பாத்திரங்கள், கார் கண்ணாடி மற்றும் வீட்டு சுவர் பலத்த சேதம் அடைந்தது. மேலும் பக்கத்து வீட்டை சேர்ந்த காளியப்பன், செல்லத்துரை ஆகியோரது வீட்டு சுவர்களும், மேற்கூரையும் சேதம் அடைந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story