மக்கள் குறைதீர்க்கும் முகாமில் உடனடி தீர்வு மனு அளித்த மாணவிக்கு காதொலி கருவிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


மக்கள் குறைதீர்க்கும் முகாமில் உடனடி தீர்வு மனு அளித்த மாணவிக்கு காதொலி கருவிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 17 Nov 2019 11:00 PM GMT (Updated: 17 Nov 2019 7:58 PM GMT)

தொண்டாமுத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் உடனடி தீர்வாக மாணவிக்கு காதொலி கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,

தொண்டாமுத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் உடனடி தீர்வாக மாணவிக்கு காதொலி கருவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

குறைதீர்க்கும் முகாம்

கோவையை அடுத்த பேரூர், வேடப்பட்டி, தாளியூர் மற்றும் தொண்டாமுத்தூர் மாரியம்மன்கோவில் திடல், நரசிபுரம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1,350 பயனாளிகளுக்கு ரூ.9.47 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு திட்டத்தை செம்மையாக நடைமுறைபடுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.76 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடனடி தீர்வு

இதன் மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்து துறைகளை சேர்ந்த ஒரு அலுவலர் குழுவின் மூலம் மனுக்கள் பெறப்படும். இந்த மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.

அதன் அடிப்படையில் பேரூர், வேடப்பட்டி, தாளியூர், தொண்டாமுத்தூர், நரசிபுரம் ஆகிய இடங்களில், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடக்கும் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.

மக்களின் அடிப்படை தேவைகள்

விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்படி குறைதீர்க்கும் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து உள்ளார்.

இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பபட்டு, அந்தமனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். பல்வேறு நலத்திட்ட பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படை தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணப்படும். மேலும் இத்திட்டம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்பு திட்டமாக திகழ்கின்றது.

காதொலி கருவிகள்

அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும், அனைவரும் பெற்று பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொண்டாமுத்தூரில் நடைபெற்ற முகாமில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மேடையில் வைத்து தென்னமநல்லூர் தென்றல் நகரை சேர்ந்த தன்யஸ்ரீ என்ற மாணவி தனக்கு காதொலி கருவி வழங்க கோரி மனு அளித்தார்.இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனடி நடவடிக்கை மேற்கொண்டு 2 காதொலிகருவிகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story