கறம்பக்குடியில் குளங்கள் நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் பூஜை செய்து வழிபட்டனர்
கறம்பக்குடியில் குளங்கள் நிரம்பியதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
கறம்பக்குடி,
கறம்பக்குடியில் திருமணஞ்சேரி விலக்கு சாலை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குமரகுளம், தென்னதிரையன்குளம் உள்ளது. இந்த குளங்களின் மூலம் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கறம்பக்குடி பகுதியில் பருவமழை சரியாக பெய்யாததால் இந்த குளங்களில் தண்ணீரின்றி வறண்டு கிடந்தது. தற்போது இந்த குளங்கள் குடிமராமத்து பணியின் மூலம் தூர்வாரப்பட்டு வரத்து வாரிகளும் சீரமைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்ததாலும், காட்டாற்று தண்ணீர் வரத்து வாரியில் தடையின்றி வந்ததாலும் குமரகுளம் மற்றும் தென்னதிரையன்குளம் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதையொட்டி அந்த குளங்களின் மதகுகள் முன்பு ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் நீர்பாசன சங்க விவசாயிகள் தேங்காய், பழங்கள், மலர்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளங்களில் தண்ணீர் இல்லை. காட்டாற்று வரத்துவாரி சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, தண்ணீர் முழுமையாக வந்து சேர்ந்ததால் குளம் நிரம்பி உள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயக்கட்டுதாரர்கள் மூலம் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப மதகுகள் மூலம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் மழை பெய்து விவசாயத்திற்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர்.
Related Tags :
Next Story