மின்வாரியத்தில் களப்பிரிவு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


மின்வாரியத்தில் களப்பிரிவு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சி; இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 8:01 PM GMT)

மின்வாரியத்தில் களப்பிரிவு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இடுப்பு கயிறு கட்டுதல், மின்கம்பம் ஏறுதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் எனப்படும் களப்பிரிவு பணியில் உள்ள காலிப்பணியிடங்களை உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்த களப்பிரிவு பணிக்கு இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்தவர்களுக்கு சி.ஐ.டி.யு.வின் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டக்கிளை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இலவச பயிற்சி மையம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐ.டி.ஐ. படித்த இளைஞர்கள் உள்பட 215 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு இடுப்பு கயிறு கட்டுதல் மற்றும் மின் கம்பத்தில் ஏறுதல் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியை தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். இதில் இளைஞர்கள் இடுப்பு கயிறு கட்டுதல் மற்றும் அவர்களுக்கு மின் கம்பம் ஏறுதலுக்கான பயிற்சிகளை பயிற்றுனர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர். அதனை தொடர்ந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் இடுப்பு கயிறு கட்டியும், மின் கம்பத்திலும் ஏறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை எழுத்து தேர்வு பயிற்சி மைய தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்டத்தலைவர் அகஸ்டின், செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் கண்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story