மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள்


மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:30 PM GMT (Updated: 17 Nov 2019 8:40 PM GMT)

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டுயானைகள் வழிமறித்தன.

மஞ்சூர்,

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டுயானைகள் வழிமறித்தன.

மனித-வனவிலங்கு மோதல்

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளை ஒட்டி தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் தேயிலை தோட்டங்களை சுற்றி வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் காட்டுயானை, கரடி, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் நுழைவது வாடிக்கையாக உள்ளது. அப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது.

மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இதனால் மேற்கண்ட சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அப்போது வாகனங்களை காட்டுயானைகள் துரத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன. மேலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானைகள்

இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் மஞ்சூர்-கோவை சாலையில் கெத்தை பகுதியில் 4 காட்டுயானைகள் உலா வந்தன. அப்போது மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி 38 பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை காட்டுயானைகள் வழிமறித்தன. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த தனியார் பஸ்கள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே வாகன ஓட்டிகள் ‘ஹாரன்‘ அடித்து கொண்டே இருந்தனர். இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு காட்டுயானைகள் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

‘ஹாரன்‘ அடிக்கக்கூடாது

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். காட்டுயானைகளை கண்டால் ஹாரன் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் காத்திருந்தால், அவை வனப்பகுதிக்குள் சென்றுவிடும். ஹாரன் எழுப்பும்போது திடீரென அவை மிரண்டால் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. மேலும் வாகனங்களை விட்டு கீழே இறங்கி செல்போனில் புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story